நாகர்கோவில், டிச. 18 –
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சண்முகநாதன், ரேணு காதேவி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர் மீதான புகார்கள் மனுக்கள் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை அலுவலர்கள் துறை ரீதியான விசாரணைகளை தாமதம் இன்றி அரசு நிர்ணயத்தில் உள்ள கால வரையறைக்குள் முடித்திட வேண்டும், தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும், ஊர் நல அலுவலர்கள் பயிற்சி காலத்திற்கான இரு ஊதிய உயர்வுகள் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் அனு மதித்து ஓய்வூதிய பலன்கள் கணக்கிட ஏதுவான பொதுவான அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் வரவேற்றார். மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் குற்றாலம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சிதுறை சங்க மாநில துணைத்தலைவர் நாஞ்சில் நிதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சாந்தி நன்றி கூறினார்.



