நாகர்கோவில், நவ. 28 –
செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது திராவிட கட்சிகளுக்கு கிடைத்திருக்கிற தலைக்குணிவு என்றும், இதன்மூலம் விஜய் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்துக்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அதிமுகவின் பழம்பெரும் அரசியல்வாதி. அவர் விஜய் பக்கம் சென்றிருப்பதால் தவெகவின் பலம் தான் அதிகரித்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்திற்குள், நடிகர் கட்சி என்கிற பிம்பத்தை உடைத்து, அரசியல் கட்சி என்கிற அந்தஸ்தை தவெக பெற்றுள்ளது. இது திராவிட கட்சிகளுக்கு கிடைத்திருக்கிற தலைக்குணிவு எனலாம்.
1967லிருந்து தமிழகத்தில் திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் வர வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் மூலம் அண்ணா, எம்ஜிஆர் புகைப்படங்கள், கட்- அவுட் வைத்து திராவிட கட்சிகளின் வாக்குகளை பெற விஜய் முயற்சிக்கிறார்.
அதே வேளையில் செங்கோட்டையன் போன்று திமுகவிலிருந்தும் ஒருவர் விஜய் பக்கம் இணைந்து விட்டால், அது தவெகவுக்கு அசூர பலமாகி விடும். விஜயின் தற்போதைய அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது, திமுகவுக்கு எதிராக நேரடியாக தேர்தல் களத்தில் இறங்க தயாராகி விட்டார். போகிற போக்கில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் கரூர் தொகுதியில் திமுகவுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.



