ஈரோடு, நவ. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் “அன்புச்சோலை” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 13 மாநகராட்சிகளில் 25 அன்புசோலை மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அன்புச் சோலையின் முக்கிய நோக்கமானது முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுது போக்கு, திறன் மேம்பாடு நிகழ்வுகள் மூலம் மனமும் உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல், முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு, சமூக உறவுகளை வலுப்படுத்துதல். ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது குடும்பப் பிணைப்பு தொடரவும், அதே சமயம் பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ள வகையில் பகல் நேரங்களைக் கழிக்கவும் உதவும் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கி வைக்கப்பட்டதாகும்.
மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பகல்நேர பராமரிப்பு உதவி, பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழல் வழங்குதல், மூத்த குடிமக்கள் தங்கள் வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குதல். தேநீர்,வெந்நீர் வழங்குதல் தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூகப்பணியாளர்கள் மற்றும் உடல் நல சிகிச்சையாளர்கள் மூலம் ஆரோக்கியத்திற்கான வசதிகள் வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புக்கான ஏற்பாடுகள், தொலைக்காட்சி, தினசரி நாளிதழ்கள், மாத இதழ்கள். ஆன்மீக புத்தகங்கள், நாவல்கள் சிறுகதைகள், அறிவியல் மற்றும் இயற்கை புத்தகங்கள், மருத்துவ புத்தகங்கள் உள்ளடங்கிய நூலக வசதி யோகா மற்றும் உடற்பயிற்சி கலை மற்றும் கைவினைப் பொருட்கள், குழு விவாதங்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கப்படவுள்ளது.
அதன்படி அமைச்சர் முத்துசாமி ஈரோடு ரங்கம்பாளையம், லட்சுமி கார்டன், சேரன் நகர் அட்சயம் அறக்கட்டளையுடன் இணைந்தும் மற்றும் ஜீவா நகர் சென்டர் பார் ஏக்சனி அண்டு ரூரல் எஜிகேசன், கேர் நிறுவனத்துடன் இணைந்தும் 2 இடங்களில் அன்புச் சோலை இல்லங்கள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இல்லங்களை பார்வையிட்டு முதியவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார். மேலும் முதியோர்கள் மகிழ்ச்சியோடு கேரம்போர்டு, செஸ்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிய நிகழ்வினை பார்வையிட்டார்.
ஈரோடு மாநகராட்சி பகுதி, ரங்கம்பாளையம், லட்சுமி கார்டன், சேரன் நகரில் உள்ள அன்புச்சோலை இல்லத்திற்கு வருகை தரும் குறிக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா ராமசாமி கூறும் போது: வீட்டில் தனியாக இருக்கும் என்னை போன்று முதியவர்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச்சோலை என்ற அகம் மகிழும் திட்டத்தினை கொண்டு வந்து எங்களைப்போன்ற வயதான அனைவருக்கும் புத்துணர்ச்சியினை ஊட்டியுள்ளார் என்று கூறினார்.
ஈரோடு ரங்கம்பாளையம் சேரன் நகரில் உள்ள அன்புச்சோலை இல்லத்திற்கு வருகை தரும் இரணியன் வீதியைச் சேர்ந்த 70 வயதான கிருஷ்ணன் கூறும் போது: அன்பு சோலை இல்லத்தில் நடைபெறும் யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் எங்கள் மனதும். உடலும் புத்துணர்வு பெறுகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.



