மதுரை டிசம்பர் 21,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
மதுரை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் வேலைக்குச் செல்லும் மகளிர் என பெரும்பான்மையான பொதுமக்கள் அரசு போக்குவரத்தையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை இலாப நோக்கோடு அல்லாமல் சேவை நோக்கோடு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்காக இக்கழகங்கள் மூலம் நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகள் என பேருந்து சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 40 பணிமனைகள் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 2386 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாதாரணப் பேருந்து, விரைவுப்பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்து போன்ற பல்வேறு விதமான பேருந்து சேவைகளை இயக்கி வருகின்றது. மேலும், நாளொன்றுக்கு 9.78 இலட்சம் கிலோமீட்டர் இயக்க தூரம் நிர்ணயிக்கப்பட்டு மாதத்திற்கு 293.40 இலட்சம் கிலோமீட்டர் தூரம் பேருந்து இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1061 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 31830 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் 07.06.2021 அன்று மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில அளவில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 31-07-2024 வரையில் பயனாளிகள் மொத்தம் 513 கோடியே 23 இலட்சம் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மதுரை கோட்ட இயக்கப் பகுதிகளான மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மகளிர் தினந்தோறும் சுமார் 6 இலட்சம் பயனாளர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகிறார்கள். விடியல் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு மகளிர் தங்கள் பயணத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இல்லை பயணக் கட்டணமில்லாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லமுடியும் என்பதால் மகளிரின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இதனால் சமூகத்தில் மகளிர் சுயமாக தங்களுடைய குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படையில் அவர்களாகவே முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டு சமூகத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு திருப்பூர் (தொழில்) மதுரை (வர்த்தகம்) மற்றும் நாகப்பட்டினம் (வேளாண்மை) ஆகிய மலட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாநாந்திர செலவில் சுமார் ரூ.888. சேமிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்திடும் நோக்கில் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்கள். அதன்படி, அரசு நிதியில் 5,000 புதிய பேருந்துகளும், KFW ஜெர்மன் நிதி மூலம் 2066 பேருந்துகளும் என மொத்தம் 7,666 பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை கோட்டத்திற்கு மட்டும் மொத்தம் 1156 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2022 – 2023 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இதுவரை ரூ.169.92 கோடி மதிப்பீட்டில் 398 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் ரூ.2054 கோடி மதிப்பீட்டில் 29 புதிய அதிநவீன தாழ்தளநகர் சொகுசுப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், அவர்தம் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதலமைச்சரின் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டம். அலங்காநல்லூரை சேர்ந்த நஜிமா கார்த்திக் தெரிவிக்கையில் நான் மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். அரசு பேருந்தில் தினசரி பயணித்து வேலைக்கு சென்று வருகிறேன். மாதத்திற்கு ரூபாய் 2000 முதல் 2500 வரை பேருந்து கட்டணமாக செலவாகும். எனது மாதச் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பேருந்து கட்டணமாக செலவழித்து வந்தேன். தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பண திட்டத்தின்கீழ் நானும் பயனடைந்து வருகிறேன். இதன் மூலம் சேமிக்கப்படும் பணம் எனது அவசர தேவைக்கு பேருதவியாக இருக்கிறது. பெண்களை முன்னேற்றக் கூடிய வகையில் இச்சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வெளியீடு
செய்திமக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டம்