மார்த்தாண்டம், மே.30 –
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 கோடி மதிப்பில் திருவட்டார் பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றது. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.
இப்பேருந்து நிலையமானது 48.50 சென்ட் பரப்பளவு கொண்டது. பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் 12 கடைகளும், முதல் தளத்தில் 6 கடைகளும் என மொத்தம் 18 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் இருக்கைகள், மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இலவச மற்றும் கட்டண கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இப்பேருந்து நிலையத்திற்கு 70 அரசு பேருந்துகளும், 2 தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 1800 பயணிகள் வருகை புரிக்கின்றனர். இன்று திறப்பு விழா நடத்திய அரசுக்கு மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் குத்துவிளக்கேற்றினார்.
திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.