ஈரோடு மே 12
ஈரோடு கருங்கல்பாளையத்தைசேர்ந்தவர் கன்னியப்பன் வயது 47. இவர் சேப்டி பின்னை வாயில் வைத்து இருந்தபோது எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார். உடனடியாக அவர் ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
உடனடியாக எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது தொண்டைக்குழிக்கு கீழே அந்த சேப்டிபின் விரிந்த நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு மாற்றப்பட்டு அவருக்கு என்டோஸ்கோப்பி மூலம் தொண்டையில் சிக்கிய அந்த சேப்டி பின்னை டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான டாக்டர்கள் வெற்றி கரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் கன்னியப்பன் வழக்கம் போல் உணவு உட்கொண்டு வருகிறார்.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.30,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு தந்தை பெரியார் அரசு பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி கன்னியப்பனின் தொண்டையில் இருந்து சேப்டி பின்னை அகற்றி அவரை காப்பாற்றிய டாக்டர் குழுவினரை கன்னியப்பனின் உறவினர்கள் பாராட்டினர்.