நாகர்கோவில் செப் 10
குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.அந்த வகையில் நேற்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராககன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.உடன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் , அகஸ்தீஸ்வரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு , சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுந்தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் சரவணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.