நாகர்கோவில் ஏப். 30
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நிர்வாக காரணங்களின் அடிப்படையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும் 2024 – 25ஆம் கல்வியாண்டு வரை மட்டும் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.
தற்போது இக்கல்வி ஆண்டு வரை மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இதர ஆசிரியர்களை பள்ளி இறுதி நாள் முடிவதற்கு முந்தைய நாளில் பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் பணியில் சேர சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும் படி தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 – 25ம் கல்வியாண்டில் மாற்றுப் பணியில் பணிபுரியும் ஆசிரியர்களை பள்ளி இறுதி நாள் முடிவதற்கு முந்தைய நாளில் பணியில் சேர அறிவுறுத்தவும், பணி விடுவிப்பு அறிக்கையை உடனடியாக முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பி வைக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.