கன்னியாகுமரி ஏப் 15
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவருடைய மகன் சிபி என்பவர் பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர்.அங்கு கடலை பார்த்த உடன் சிபியும், ஸ்ரீராமும் கடலில் குளிக்க இறங்கி உள்ளார்கள். பள்ளி மாணவர் ஹரிகரன் கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் இருவரும் கடலில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். சிபி சற்று ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறத. இதில் சிபி அலையில் சிக்கிக் கொண்டார்.இதை கரையில் நின்று பார்த்து கொண்டிருந்த ஹரிகரன் ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள் என அக்கம் பக்கத்தில் நின்றவர்களை உதவி கேட்டார். உடனே, அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் சிலர் விரைந்து வந்து கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கிய சிபியை மீட்டனர். அப்போது அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு பாறை மீது படுக்க வைத்தனர். இதற்கிடையே ஒரு ராட்சத அலை எழும்பி பாறையில் இருந்து சிபியை மீண்டும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. எமன் எப்படி வேண்டுமானாலும் வருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருக்கிறது. எனினும் பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு அவரை மீட்டனர்.ஆனால், அவரை மீட்டு கொண்டு வந்த போது, அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் கடலோர காவல்குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிபியின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



