நாகர்கோவில் பிப் 12
குமரி மாவட்ட மக்கள் அன்போடு அப்பச்சி என்று அழைத்த காமராஜரின் வரலாறு பேசும் கல்வெட்டை உடைத்தெறிந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து
தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற மாநில பொதுச்செயலாளர் நாஞ்சில் BS.ரஜினிசெல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- சொந்தமாக வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து கடைசியில் இந்த மண்ணை விட்டு மறைந்த பெருந்தலைவர் அனைவருக்கும் கல்வி தடைபடாது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிச்சை எடுத்தாவது பள்ளிக்கூடங்களை நடத்துவேன் என்ற உயரிய நோக்கில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் ஆவார்.
நம் முன்னோர்களின் பஞ்சத்தைப் போக்கவும், விவசாயத்தில் நாம் செழித்து வளரவும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் முயற்சியாக இரு மலைகளுக்கு இடையே தண்ணீரைக் கொண்டு சென்று பாசன வசதி செய்து கொடுப்பதற்காக
1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. தண்ணீா் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத்தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு.
ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன. அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக மாறுமென எண்ணிய அப்போதைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.
தற்போது இந்த பாலம் சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது.
இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க
மாத்தூர் தொட்டி பாலத்தில் பெருந்தலைவர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களிடம் அடையாள படுத்திட வேண்டும். மேலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் கல்வெட்டை நிறுவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



