தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர். காரிமங்கலம் ஒன்றியம், பைசு அள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் சதீஷ் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல் படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களுக்கும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்துக் கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறலாம் என்றார். இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் நிர்மல் ரவிக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



