நாகர்கோவில், மே- 29
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவ மாணவியரின் தங்கும் விடுதி உள்ளது இந்த விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜன்னல் வெளிப்புற சன் சைடு பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று கிடப்பதாக விடுதியின் பின்புறம் சாலையில் சென்றவர்கள் பார்த்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் பெரும் படையுடன் நாயை மீட்பதற்காக சென்றனர். கீழே வலை விரித்து நாயை பிடிக்க முயற்சி செய்யாமல் அஜாக்கிரதையாக மேல் மாடியிலிருந்து கீழே வலையை தொங்கவிட்டு நாயை மீட்க முயற்சி செய்தனர். தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா ? என்ற உயிர் பயத்தில் இருந்த குட்டி நாய் தீயணைப்பு வீரர்கள் வலையை விரித்து கூச்சலிட்டதும் பயத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தது. இதில் பரிதாபமாக குட்டிநாய் உயிரிழந்தது. பின்னர் அங்கு வந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நாய் செத்துவிட்டது அவ்வளவுதான் என்று ஒரு உயிரின் விலை மதிப்பை தெரியாமல் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒரு உயிரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்று தீயணைப்பு வீரர்களுக்கு எவ்வாறெல்லாமோ பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த குட்டி நாய் தீயணைப்பு வீரர்களின் கவனக்குறைவாலும் அஜாக்கிரதையாலும் பரிதாபமாக உயிரிழந்தது. நாயின் உயிரை மீட்க முடியாத தீயணைப்பு வீரர்கள் வெள்ள பாதிப்பு பகுதியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை எப்படி மீட்பார்கள் ? என்று அங்கு கூடி இருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர்.