திருப்புவனம், நவம்பர் 21 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகரில் தனியார் பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட 50 சிசிடிவி கேமராக்களை மானாமதுரை டிஎஸ்பி பார்த்திபன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசுகையில்: திருப்புவனத்தில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 20,000 மக்கள் வசித்து வருகின்றனர். குற்றச் சம்பவங்களில் சாட்சி அளிக்க பலர் முன்வராததால், போலீசார் குற்றவாளிகளை கைது செய்தாலும் எளிதாக தப்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தற்போது போலீசார் சிசிடிவி பதிவுகளை அதிகமாக நம்பி செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் “சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மையில் மானாமதுரையில் 12 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்து தங்கத்தை மீட்டோம்,” என்று தெரிவித்தார். இந்த விழாவில் காவல் ஆய்வாளர் முத்துகுமார், எஸ்ஐ பாரத்ராஜா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



