சிவகங்கை, டிச. 04 –
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை உடனடியாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் சங்கத்தின் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பா. லதா வரவேற்புரையாற்றிட தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர் தொடக்க உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு அரசிற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய ஊழியர்கள் அனைவரும் சிவகங்கை பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், சிவக்குமார், செல்வபிரபு ஆகியோர் கொண்ட குழு சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர். சிவகங்கை நகரின் பிரதான சாலையாதலால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகளான சங்கர், சகாய தைனேஷ், சின்னப்ப செல்வராஜ், பாலமுருகன், பாண்டி, சிஐடியூ எஸ். உமாநாத், காளிதாஸ், சரவணக்குமார், செல்லமுத்து, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
துணைத்தலைவர்கள் வினோத் ராஜா, அ. பாண்டி, மூவேந்தன், இணைச் செயலாளர்கள் சின்னப்பன், கிருஷ்ணகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோரும் மறியலில் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆ. தமிழரசன் நன்றி கூறினார்.



