


அரியலூர்,டிச;24
தமிழ்நாட்டு இளைஞர்களைக் கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்கவும், தமிழ்நாட்டில் உள்ள
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, அவர்களது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்; 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது.
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகரிக்க செய்யும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது. அறிவை தேடுபவர்களுக்கு ஊக்கமளித்தல், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு அதிகாரம் அளித்தல், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதலை ஒருங்கிணைத்தல், உயர்கல்விக்கான அணுகல் சீராகவும், ஆதாரவாகவும் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்சார்ந்த கனவுகளைத் தொடர தேவையான வாய்ப்புகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அர்ப்பணிப்புக்கு சான்றாக திகழ்கிறது.
இதன் நீட்சியாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 அரசு பொறியியல் கல்லுரிகளில் அமைக்கப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்கள். இந்த 29 அரசு பொறியியல் கல்லுரிகளில் அமைக்கப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களிலும் தலா 100 வீதம் 2,900 கணினிகள் நிறுவப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதுடன் விரைவாக பணி வாய்ப்புகள் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டமானது அரியலூர் மாவட்டத்தைச் சேரந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் நான்முதல்வன் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை நெறிபடுத்தி, திறமையான மனித வளத்திற்கான வளர்ந்து வரும் சந்தை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூழலை உருவாக்கவும், தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகில் எந்த நாட்டு மாணவரையும் விட தரமும், தகுதியும் குறைந்தவர் கிடையாது எனும் தொலைநோக்கு பார்வையுடன் “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் அதிகளவில் பங்கேற்று வெற்றிபெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வு பிரிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரயில்வே வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகிய மத்திய அரசுத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்வுக்குப் படி எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் 12-ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நடைபெற்ற நான்கு முகாம்களில் கலந்து கொண்ட 414 மாணவ, மாணவியர்களில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 மாணவர்களும், பொறியியல் கல்லுரியில் 1 மாணவரும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 21 மாணவர்களும், ஐ.டி.ஐ-களில் 44 மாணவர்களும், குறுகிய கால திறன் பயிற்சி படிப்புகளுக்கு 83 மாணவர்களும் விருப்பம் தெரிவித்து நேரடி சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு, உயர்கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 46,657 பள்ளி மாணவ, மாணவிகளும், 5,748 பொறியியல் மாணவ, மாணவிகளும், 9,334 கலை அறிவியல் படித்த மாணவ, மாணவிகளும் என மொத்தம் 61,739 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில், மாவட்ட அளவில் செயல்படுத்த ஏதுவாக, அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம்” நிறுவ ஆணையிடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டம், விளாங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் நிறுவுவதற்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.10,00,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள், நவீன கணினிகள் மற்றும் சாதனங்கள் நிறுவப்பட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் மாணவ, மாணவிகள் திறன் மேம்படுத்தும் வகையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பயன்கள் குறித்து மாணவி சுஜிதா என்பவர் தெரிவித்தாவது:
வணக்கம் எனது பெயர் சுஜிதா. நான் அரியலூர் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியில் பிரிவில் படித்து வருகிறேன். எங்கள் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கனினிகள் வழங்கப்பட்டுள்ளது. இது எங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.
இம்மையத்தின் மூலம் எனது கணினி கோடிங் திறனை அதிகரித்துக் கொள்வேன். பைத்தான், ஜாவா (Python, Java) உள்ளிட்ட கணினி கோடிங் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோடிங் திறனை மேம்படுத்தி கொள்வதன் மூலம் என்னால் கல்லூரி படிப்பை முடித்தவுடன் பணி வாய்ப்புகளை எளிதாக பெறமுடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வசதியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாணவி சுஜித்தா என்பவர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பயன்கள் குறித்து மாணவன் பூபதி என்பவர் தெரிவித்தாவது:
என் பெயர் பூபதி. நான் அரியலூர் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்டரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் படித்து வருகிறேன். பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது எங்களது கல்லூரியில் நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு புதிததாக கணினிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் எங்களது திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகள் சொல்லிதரப்படுகிறது. அது புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்லாது எங்களது கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் எனது திறனை அதிகரித்துக் கொள்வேன். இத்தகைய மையத்தை எங்களது கல்லூரிக்கு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி என மாணவன் பூபதி தெரிவித்தார்.
தொகுப்பு :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீ ராம் அரியலூர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.