கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு அனைத்து துறை அலுவலர்கள் மூலமாக முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாத்து ஓடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ,ப., அவர்கள் இன்று (21.10.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து வருகின்ற தண்ணீர் தோவாளை கால்வாய் வழியாக தோவாளை பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு செல்லும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. தோவாளை கால்வாய் மற்றும் சில கால்வாய் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் 100 நாள் பணியாளர்களை கொண்டு, தோவாளை கால்வாயில் தண்ணீர் போக்கிற்கு இடையூறாக அடர்ந்து காணப்பட்ட செடி, கொடிகள் மற்றும் மண்மேடுகள் அகற்றப்பட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மேற்படி கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றி செல்வதால் தோவாளை கால்வாய் விவசாய பெருமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.