பரமக்குடி,நவ.2: பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பேதிய மருத்துவர்கள் இல்லாததால், மறுக்கப்படும் சிகிச்சையால், அழக்கழிக்கப்படும் நோயாளிகள். கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.
ராமநாதபுரத்தில் செயல்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால், பரமக்குடியில் உள்ள தாலுகா மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, முறையான சிகிச்சை அளிக்கப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருந்ததற்காக தலைமை மருத்துவர் மற்றும் ஊழியர்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். இருந்த போதிலும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உத்தரவை மீறும் வகையில் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் விபத்து மற்றும் வெடி விபத்துகளால் அதிகமானோர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில், கூடுதல் மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்படாததால் , சாலை விபத்து மற்றும் வெடி விபத்துக்களால் வரும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிர் பலி ஆகி வருகிறது. நேற்று, பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். மேலும் பணியில் இருந்த டாக்டர் வெளி நோயாளிகளை பார்க்க முடியாது என விரட்டியடித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.ஆகையால், உடனடியாக பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.