அரியலூர், அக்;27
அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட அரியலூர் மாவட்ட
ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், சீட்டு நடத்துபவர்கள் மற்றும் தற்காலிக இனிப்பு பலகார கடைகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.
தரமான மூலப்பொருட்களை கொண்டு இனிப்பு, காரவகைகள் தயார் செய்யவேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சூடுபடுத்தி பயன்படுத்தப்பட்ட எண்ணெயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. இதனை அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
மேலும், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்பொழுது தயாரிப்பாளர் முழு முகவரி, தயாரிப்பாளர் பெயர், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் உரிமம், பதிவு எண் கட்டாயமாக குறிப்பிடபட வேண்டும். பேக்கரிகளில் காட்சிபடுத்தப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை அதன் அருகில் கட்டாயமாக குறிப்பிடவேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம் பதிவுபெற்று கொள்ளவேண்டும். மேலும் நிரந்தர இனிப்புகார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் சுகாதார குறியீடு பெறவேண்டும்.
மேலும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாங்கள் பலகாரங்கள் காரவகைகள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கவேண்டும்.
எனவே நுகர்வோர்கள் உணவு பொருட்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.
மேலும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பான புகார்கள் இருப்பின் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்
பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்