கீழக்கரை செப் 04-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு கட்டுப்பாடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியான சீதக்காதி சாலை, வடக்கு தெரு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தலைமையில் கீழக்கரை துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் பாலா ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை நகர் முழுவதும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கீழக்கரை முழுதும் இரவு நேர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு தெரு மணல்மேடு அருகில் உள்ள முருகேசன் மளிகை கடையில் சுமார் 2.1/2 கிலோ மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கடை அருகில் உள்ள அவரது இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு கடைக்கு சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.அதேபோல் ஏர்வாடி முக்கு ரோடு அருகிலுள்ள ராம்குமார் ஸ்டால் கடை ஒன்றிற்கும் சீல் வைத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் இதுபோன்ற விற்பனைகள் தொடரும் பட்சத்தில் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று உணவு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயராஜ் கூறினார்.