புதுக்கடை, பிப். 26
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை கடல் சீற்றம் அதிகமான காலம் ஆகும். இந்த மாதங்களில் கடலேர கிராமங்கள் கடல் அலையால் சேதமடைந்து, உருக்குலைந்து காணப்படுவது வழக்கம். இந்த கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் தேங்காப்பட்டணம் கடற் கரை பகுதி ராமன்துறை கடற்கரை கிராமத்திலும் கடந்த காலங்களில் கடல் சீற்ற காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வலிமையான கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைத்தது. அதன் பின்னர் அந்த பகுதியில் கடல் அரிப்பால் அதிக சேதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மதியம் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் தேங்காபட்டனம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
ஆனல் தேங்கா பட்டணம் பகுதியில் காலை முதலே கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதே வேளை பகலில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, குறிப்பாக நள்ளிரவு சுமார் 11 மணி வேளையில் ராமன் துறை பகுதியில் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒரு சில வீடுகளிலும் தண்ணீர் உட்புகுந்தது. இதில் பாதிப்படைந்த வர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த கடல் சீற்றத்தால் ராமன் துறை கல்லறை தோட்டம் பகுதியில் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு கடலரிப்பு தடுப்பு சுவர் சேதமடைந்தது. சாலையும் சேதமாகியுள்ளது. இதில் வேறு சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பகுதிகளில் இதைவிட அதிகம்
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இணைப்பு – படம் – சேதமடைந்த சாலை , தடுப்பு சுவர், தண்ணீர் புகுந்த பகுதிகள்