தஞ்சாவூர்.மே. 12
தஞ்சாவூரில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா தொடங்கியது. இதனை முரசொலி எம்பி, மேயர் சண். ராமநாதன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு கேரளா ,கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா,லட்சத்தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகளை உறுப்பினர்களாகக் கொண்டு தென்னக பண்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சதங்கைநாதம் விழா நடத்துவது வழக்கம் இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கஜா புயல் தாக்கம், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களு க்காக சதங்கை நாதம் கலை விழா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு சதங்கைநாதம் கலைவிழா தொடங்கியது .இவ்விழா தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் முரசொலி எம்பி, மேயர் சண். ராமநாதன், மத்திய கலாச்சார துறை இயக்குனர் பல்லவி பிரசாந்த் ஹோல்கர், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் ஆகியோர் கலந்து கொண்டு முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தனர். நிறைவாக தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர் உமாசங்கர் நன்றி கூறினார்.
இவ்விழாவில் இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சீர் மவுரி நாட்டி, திரிபுரா மாநில சங்கராய், குஜராத் மாநில தாண்டியா, கர்நாடக மாநில பூஜா குனித, கேரளா மாநில கொல்கலி, தமிழ்நாட்டின் மாற்றுத் திறனாளிகளின் கர்நாடக சங்கீதம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. இதில் 110 கலைஞர் பங்கேற்றனர்.
மேலும் இந்த வளாகத்தில் அகில இந்திய கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில் 15 மேற்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த கைவினைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன இந்த கண்காட்சி தினமும் மாலை நடைபெறுகிறது..