அரியலூர்,டிச;14
அரியலுர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குழுமூர் நிவாரண முகாமில் தங்கவைப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி உடனிருந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் / புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் ஒன்றியம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி செந்துறை ஒன்றியம், முல்லையூர் காலனித் தெரு, செங்கமேடு, தளவாய் ஊராட்சி காலனி தெரு மற்றும் மதுரா நகர் ஆகிய இடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள், சாலை பாதிப்புகள், மின்கம்பங்கள் பாதிப்புகள், கால்நடை உயிரிழப்புகள், விளைநிலங்கள் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், மழைபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிட துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, குழுமூர் மற்றும் நமங்குணம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பாய், தலையணை மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
முன்னதாக குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் அருகில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வெளியேற்றும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வருவாய்த்துறையினர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்