நாகர்கோவில் மார்ச் 24
ரமலான் பண்டிகை மார்ச் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து தொடர் விடுமுறையையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், மார்ச் 28ம் தேதி தாம்பரம் – கன்னியாகுமரிக்கும், 31ம் தேதி கன்னியாகுமரி – தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மார்ச் 28ம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு வழித்தடத்தில் 31ம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தை சென்று சேரும். இரு வழித்தடங்களிலும் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.இந்த ரயில்களில் 14- இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நேற்று காலை (மாா்ச் 23) தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.