மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடை வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் முதல் திருமங்கலம் வரை சுமார் 32 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.11,368 கோடியில் நடைபெற உள்ள இந்தத் திட்டம் உயர்நீதிமன்றம், புதூர், கோரிப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பெரியார் நிலையம், ஆண்டாள்புரம், திருப்பரங்குன்றம் மார்க்கமாக வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவக விடுதி முதல் ஆண்டாள்புரம் வரை சுரங்கப்பாதை
அமைய உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிலையங்கள் அமைய உள்ளன. முதல் கட்டப் பணிகளான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் மதுரையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுரங்கப்பாதையில் அமைக்கப்பட உள்ள நுழைவுப்பாதை, வெளியேறும் இடங்கள் குறித்தும், மதுரை ரயில் நிலையத்துடன் மெட்ரோ சுரங்கப்பாதையை இணைப்பது குறித்தும் அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார்.