மார்த்தாண்டம் அக் 3
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில், இந்த பாலத்தின் உறுதிதன்மை மற்றும் அடிக்கடி பழுதடையும் காரணத்தை கண்டறிய உயர்மட்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டுமென கன்னியாகுமரி
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் நகரை கடக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டி சில ஆண்டு காலம் மட்டுமே கடந்துள்ள நிலையில் கடந்த மே மாதம் பாலத்தின் மைய பகுதி சேதமடைந்து, சாலையின் நடுவே பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்பொழுது பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்பனிடும் பணிகள் நடைபெற்றது.
மீண்டும் போக்குவரத்திற்காக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களில் மீண்டும் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் நடுவில் பெரிய பள்ளம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பாலம் அடுத்தடுத்து சேதமடைவது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற ஒன்றாகும்.
கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மை, தரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அது வரை இந்த பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்க கூடாது. மேலும் பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.