குமரி மாவட்டத்தில் தினமும் பல்வேறு கம்பெனிகளைச் சார்ந்த ஏராளமான புதிய இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் சுட்டரிக்கும் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் பெருகிவரும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப தினமும் பல்வேறு கம்பெனிகளில் இருந்து
இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை ஏராளமான புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் எல்லாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக தினசரி வந்து செல்கின்றன.
இந்நிலையில் குமரி மாவட்டம் குலசேகரன் புதூர் பகுதியில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த அலுவலகம் அருகில் வைத்து புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு கொண்டு வரப்பட்டு காண்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
இதற்காக தினசரி காலை 10 மணி முதல் ஏராளமான வாகனங்கள் இங்கே வந்து பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் ஒதுங்கி நிற்பதற்கு நிழலுக்கு இடமும் இல்லாமல்மிகவும் கஷ்டப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மேலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பதிவு செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய வாகனங்களை சுட்டரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் அதிக வெப்பத்தால் பழுதடையும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றது. மேலும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராமல் பல மணி நேர காத்திருப்பிற்கு பின்னர் வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கும் செல்ல முடியாமல் வெயில் கடுமையான தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இதில் தலையிட்டு பொதுமக்கள் நலன் கருதி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கின்ற அலுவலகத்தைத் திறந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கஉரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்