தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா கும்மனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் முன்னிலை வகித்தார் . முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் சாந்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள், புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், வேளாண் நுண்ணுயிர் பாசனம் மற்றும் பண்ணை கருவிகள் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்சாந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கவுரவ் குமார், உதவி கலெக்டர் காயத்ரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை, மாவட்ட கவுன்சிலர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



