நாகர்கோவில் அக் 18
குமரி மாவட்டத்தில் நாளை 19-ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் படித்துவிட்டு வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் :-
அவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் நாகர்கோவில் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை jobfairdeonagercoil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே CONFIRMATION MAIL அனுப்பப்படும். Confirmation Mail பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் DECGCNGL என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) សំ பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.