மார்த்தாண்டம், செப்- 18
மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளை அகதிகள் முகாமை சேர்ந்தவர் நிலக்ஷயா (22). இவர் சென்னையில் ஹோம் நர்சாக பணிபுரிந்த போது, சேலம் தாரமங்கலம் அகதிகள் முகாமை சேர்ந்த புவனேஸ்வரன் (30) என்பதுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமணமான ஒரு வருடத்தில் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக நிலக்ஷயா கணவரை பிரிந்து குழந்தை உடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (16-ம் தேதி) மதியம் நிலக்ஷயா வீட்டில் இருந்த நேரம் அங்கு வந்த புவனேஸ்வரன் வீட்டு கதவை உடைத்து நுழைந்து மனைவி நிலக்ஷயாவை அசிங்கமாக பேசி கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த நிலக்ஷயா ரத்த வெள்ளத்தில் துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். இதை அடுத்து புவனேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நிலக்ஷயா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான புவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.


