அரியலூர், ஜூன்:13
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
உறுதி மொழி நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கையொப்பமிட்டு துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிற்சாலை ஆய்வாளர், காவல் துறை மற்றும் குழந்தைகள் உதவிமையம் 1098 ஆகியோர் இணைந்து அரியலூர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் பட்டறைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என கூட்டாய்வு மேற்கொண்டனர். பின்னர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு வாசக ஸ்டிக்கரை பேருந்துகளில் ஓட்டினார். மேலும் பொது மக்களுக்கு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்துவர்களுக்கு ரூ.20000/- முதல் ரூ.50000/- வரை அபராதமும் அல்லது 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்க குழந்தை தொழிலாளர் தடைச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், பீடி தயாரிப்பு நிறுவனங்கள், வீட்டு வேலை, மருந்து கடைகள், பண்ணை வேலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் மற்றும் கடைகளிலோ குழந்தைகளை பணிக்கு அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணிக்கு அமர்த்தினால் மேற்கண்டவாறு அபராதம் அல்லது சிறைதண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையோ விதிக்கப்படும். எனவே பொது மக்கள் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும், அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவறும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும் என்றும், அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் லெட்சுமணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஜெ.செல்வராசு, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.