நாகர்கோவில் மாநகராட்சி 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில் குமார் மாநகராட்சி ஆணையரை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் மாமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டங்கள் நடைபெறும் அவையில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அமைந்திருப்பது மகிழ்ச்சியாக கருதுகிறேன். மேலும் நம்முடைய பாரதநாட்டை ஆளும் பாரத பிரதமர் நரேந்திரமோடி, புகைப்படமும், நமது குடியரசுதலைவர் திரௌபதி முர்மு புகைப்படமும் அமைத்தால் நம்முடைய மாநகராட்சி கூட்டரங்கம் பெருமை அடையும் என தெரிவித்து கொள்கிறேன். ஆகையால் 12வது வார்டு மாமன்ற உறுப்பினராகிய எனது கோரிக்கையை ஏற்று இரு தலைவர்களின் புகைப்படத்தை ஆணையர் உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.