நாகர்கோவில் செப் 25
குமரிமாவட்டத்தில் கீழ்மிடாலம்-A, மிடாலம்-B, இனையம்புத்தன்துறை, ஏழுதேசம்-A,B&C மற்றும் கொல்லங்கோடு-A&B வருவாய் கிராமங்களில் தாதுமணல் சுரங்கம் தோண்டுவதற்காக மொத்தமாக 1144.0610 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்தப்பகுதியில் 598.800 லட்சம் (59.88 மில்லியன் டன்) அளவிலான தாதுமணல் இருப்பதாக IREL நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது இரண்டு மண்டலாக தாதுமணல் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்மிடலாம், மிடலாம், இனயம்புத்தன்துறை ஆகிய பகுதிகளை உள்ளடங்கிய மண்டலம்-அ வில் 544.0688 ஹெக்டர் நிலமும், மண்டலம்-ஆ வில் ஏழுதேசம், கொல்லன்கோடு பகுதியில் 599.9930 ஹெக்டர் நிலமும் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த இரண்டு மண்டலங்களை உள்ளடக்கிய பகுதியில் மொத்தமாக 79.8613 ஹெக்டர் அரசு நிலமும், 1064.2005 ஹெக்டர் தனியார் நிலமும் உள்ளது.
மேலும், இதில் 333.4876 ஹெக்டர் கடற்கரை மண்டல மேலாண்மை மண்டல பகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த சுரங்கம் 40 ஆண்டுகளை ஆயுட்காலமாகக் கொண்டது.
ஒரு நாளைக்கு 5000 டன் வீதம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் டன் தாதுமணல் எடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒருவருடத்திற்கு 1,52,250 டன் தாதுமணல் சுத்திகரிக்கப்பட்டு கனிமங்கள் பிரித்தெடுக்கப்படவுள்ளது.
இதேவேளையில், மணவாளக்குறிச்சியில் செயல்படும் தாதுமணல் பிரிப்பு அலகின் அரசு அனுமதித்துள்ள தாதுமணல் சுத்திகரிப்பு அலகு 1,14,600 டன் (ஓராண்டுக்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள 1,52,250 டன் உற்பத்தியாகும் என்பதற்கும் மணவாளக்குறிச்சி செயல்படும் தாதுமணல் சுத்திகரிப்பு ஆலையில் அளவான 1,14,600 டன்னை விட 37,650 டன் அதிகமாகும். அறிக்கையில் இதுகுறித்து ஒரிருவரிகளில் கூறப்பட்டாலும் இதனால் ஏற்படும் சுழலியல் பாதிப்பு, அரசு அனுமதித்த அளவையும் தாண்டி செயல்படுவது போன்று சட்டவிதிமீறல்களால் நமது வாழ்வு பறிபோகும் என வெளிப்படையாகத் தெரிகிறது.
இதேபோன்று, இந்ததிட்டத்திற்கான நிலங்களில் CRZ-1 B (உயரலைக்கோட்டிற்கும் தாழ்வலைக்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதி) வரம்பிற்குட்பட்ட 5.2946 ஹெக்டர் நிலமும், மண்டலம்-II ல் 203.3491 ஹெக்டர் நிலமும், மண்டலம்-III ல் 144.8439 ஹெக்டர் நிலமும் கையகப்படுத்தப்படும். இந்த பகுதிகள் நமது படகு நிறுத்தும் இடமாகவும், படகுகள் கட்டும் இடமாகவும் இருந்து வருகிறது. இதுகுறித்து குறிப்பாக மீனவ மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும, தற்போது நாம் பயன்படுத்தி வரும் பகுதிகள் குறித்து கூறப்படாத போது இந்தத் திட்டம் இந்தப்பகுதியில் வரக்கூடிய அனைத்து கிராமங்களையும் அழிக்கும் திட்டமாகும்.
இந்த திட்டம் வந்தால், நம் மீன்தொழில் செய்ய முடியாது. மணல் எடுக்கும் போது வெளிப்படும் கழிவுகளால் மீன்வளம் கெடும். இது எல்லாவகையிலும் மீனவமக்களுக்கும், பிற கடலோர சமூகங்களுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் எதிரான திட்டமாகும்.
மேலும், 6-9 மீ ஆழம் வரையில் தாதுமணலுக்காக கடற்கரை தோண்டப்பட உள்ளது. இது 10-15 மீ ஆழத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதிக்காது என அறிக்கை கூறுகிறது. ஆனால், தாதுமணல் அதிகமாக கிடைக்கும் போது 9 மீ அதிகமாக தோண்டப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை முறையாக நடைமுறைப்படும் என்பதற்கு யாரால் உத்தரவாதம் தர முடியும்? சில மீட்டர்கள் தோண்டப்பட்டாலும் கூட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 10-15மீ ஆழத்தில் உள்ள நிலத்தடி நீர் அடுக்குகள் கெடும். இது மீனவமக்களுக்கு மட்டுமல்ல, கடற்கரையை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களுக்கான பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் கடற்கரையிலிருந்து 310மீ மற்றும் 365மீ தொலைவில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 11.2 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதி கையகப்படுத்தப்படும். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரையில் 16 சதவீத கடற்கரையை நாம் இழக்கக்கூடும். கடற்கரை மட்டுமல்ல கடற்கரை சார்ந்த சூழலியலையும் இழப்போம். இந்தப் பகுதிகளில் உள்ள மணல்மேடுகள், ஆமை முட்டையிடும் இடங்கள் பற்றியும் அறிக்கையில் கூறப்படவில்லை.
இந்தத்திட்டத்திற்கு மிக அருகில், மிடாலம் பகுதியில் வரும் சுரங்கப்பகுதியிலிருந்து 120மீ தொலைவில் தாமிரபாணி ஆறு பாய்கிறது. இது கழிமுக சூழலியலுக்கும் கேடு விளைவிக்கும்.
இந்த அறிக்கையில், மணவாளக்குறிச்சி ஆலை 40 சதவீதம் குறைவாக தாதுமணல் கிடைக்கப்பெறாமல் இயங்குவதாக கூறுகிறது. இந்நிலையில் தற்போது தோண்டப்படும் சுரங்கங்களால் தாது மணல் கிடைக்கப்பெற்று இந்த தேவை பூர்த்தியாகும் எனக்கூறுகிறது. இந்நிலையில், இந்த சுரங்கத்திற்கு பிறகு ஆலையில் தேவைக்காக அடுத்தத்தடுத்த கனிம மணல் கிடைக்கும் இடங்கள் தோண்டப்பட உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆலையின் திறனை விட அதிகமாக மணல் அள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனக்கூறியதையும் நாம் கவனிக்க வேண்டும். இது ஓட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையையும் மற்றும் சமவெளி பகுதிகளையும் அழிப்பதற்கானத் திட்டம்.
இதேவேளையில், CRZ அனுமதிக்கு IREL விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாடு மாநில அரசும், மாவட்ட அளவிலான CRZ கமிட்டியும் அனுமதி வழங்கக்கூடாது. இது கடற்கரையையும், மீனவமக்களின் வாழ்வையும் அழிக்கும் திட்டம்.
எனவே குமரியின் இயற்கையை பாதுகாக்க, குமரி மாவட்ட மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க, மீனவர்களுக்கான கடற்கரையை பாதுகாக்க வருகின்ற 01.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று தக்கலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் கருத்து கேட்டு கூட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்து, இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட மீனவ சமூக ஆர்வலர் வேண்டுகோள்.