குளச்சல் நவ 30
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இரணியல் மற்றும் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, எதிரே வரும் வாகன ஓட்டுனர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாத கண் கூசும் வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுபோன்று பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக வாகனத்தில் வண்ண ஒளிரும் விளக்குகளை ஒளிர விட்டு வந்தால் வாகனத்தை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.