புதுக்கடை, செப் – 25
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐ ஆர் இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் ஒன்றாம் தேதி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மீனவ மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததாக கூறி மீனவ மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்தனர். இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் புதுக் கடையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
மேற்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் தலைவர் ஜெரோம் வரவேற்றார். கூட்டத்தில் நிலம் குத்தகைக்கு எடுப்பதாக கூறப்பட்ட கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட மிடாலம், ஹெலன் நகர் ,இனயம், இனயம் புத்தன் துறை, தூத்துர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசுகையில்:- கடல் மண்ணிலிருந்து ஏழு வகையான தாது பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த தாதுப்பொருட்கள் பிரித்து எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதமன்று 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த ஒப்பந்தம் போட்டுள்ளது. அப்பொழுதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன். குமரி மண்ணிலிருந்து மணல் எடுக்கும் பணியை அனுமதிக்க கூடாது என்பதை நாம் சட்டசபையில் பதிவு செய்தேன். திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. திமுக தவறு செய்தாலும் காங்கிரஸ் தட்டிக் கேட்கும். ஆனால் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை திமுக கொண்டு வராது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அரசு மக்களை பாதிக்க கூடிய திட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் . கடல் மண்ணிலிருந்து கனிமங்களை பிரித்து எடுப்பது மூலம் புற்று நோய் அதிகமாக பரவுகிறது என்பது அனைத்து மீனவ மக்களும் கூறும் குற்றச்சாட்டு ஆகும்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்பதற்கான ஆய்வு செய்ய வேண்டும். இப்படி எந்தவிதமான ஆய்வுகளும் செய்யாமல் திடீரென அக்டோபர் ஒன்றாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாவதாக அறிவித்துள்ளனர். நாளை (இன்று) நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து இந்த திட்டத்தினால் மக்கள் அடையக்கூடிய பாதிப்புகளை எடுத்துக் கூறுவோம். கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றால் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவிலான முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆகவே அனைத்து மீனவ மக்கள் உட்பட அனைத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தாரகை கத்பட் எம் எல் ஏ , மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், முன்சிறை வட்டார காங் தலைவர் ரகுபதி, கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.