களியக்காவிளை, ஏப். 14 –
களியக்காவிளை அருகே சாணி பகுதியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவில் சாணி துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு துணை சுகாதார நிலைய கட்டடங்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வியாழக்கிழமை மாலையில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி, களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாணி துணை சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேல்புறம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெபதீஸ் புரூஸ் தலைமை வகித்தார். மலையடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரும் திமுக பிரமுகருமான அருள்சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்தார். களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தனசிங் அர்ஜுன்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார ஆய்வாளர் சந்தோஷ்குமார் மற்றும் தேவசால் குமார், வின்ஸ்ராஜ், பிரபின் பொதுமக்கள் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர்.