திண்டுக்கல்லில் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் சார்பாக
மௌலானா அபுல் கலாம் ஆசாத் 136 – வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பேகம்பூரில் இந்திய தேசிய ஒருமைப்பாடு இயக்கத்தின் மாநில தலைவர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏ. அப்துல்ஜப்பார் பேசியதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இந்நாளை இந்தியாவின் தேசிய கல்வி தினமாக அறிவிக்கப்பட்ட நாளாகும்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1888 – ஆம் ஆண்டு நவம்பர் 11- ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்
கொண்ட புனைப்பெயராகும். இவர் 1947 – ஆம் ஆண்டு முதல் 1958 – ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தார்.
கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை (IIT) 1951 – ஆம் ஆண்டு உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953 – ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
இவர் சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூறுவதற்காகவே இவரது பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உயிரோடு இருந்தபோது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்பொழுது பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார். 1992 – ஆம் ஆண்டு இவரின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், ரபீக், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



