மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி அம்மன் முதல் நாள் மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஊஞ்சல், முத்தங்கிச் சேவை, விறகு விற்ற லீலை, சுந்தரர் அவதாரம், ஸ்ரீவிநாயகரம் ஜனனம், எல்லாம் வல்ல சித்தர், மஹிஷாசுரமர்த்தினி, சிவபூஜை உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளினார். விழாவின் 10-ஆம் நாளான விஜயதசமியை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு சடை அலம்புதல் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பின்னர், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தனியாக எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் விஜய தசமியை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல் ராஜன் குத்து விளக்கினை ஏற்றி 108 வீனை இசை வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.



