நாகர்கோவில், டிசம்பர் 13 –
நாகர்கோவில் ஔவை சண்முகம் சாலையில் நாகராஜர் கோயில் பின் வாசல் எதிரில் செம்மங்குளம் அமைந்துள்ளது. மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குளம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த குளத்தை பராமரித்து அழகிய ஏறி போல் மாற்றுவதற்காக ரூ. 10 கோடியில் மாநகராட்சி திட்டம் மதிப்பீடு தயார் செய்தது. ஆனால் இதற்கு இன்னும் நீர்வளத்துறை தடையின்மை சான்று வழங்கவில்லை. இதன் காரணமாக தற்போது இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இந்த குளத்தின் கரையில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்கா செயல்படுகிறது. இந்த குளத்தில் ஒரு கரையில் குவிந்து கிடந்த குப்பையில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. அனைத்தும் பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகள் என்பதால் மள மளவென தீப்பிடித்தது. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசியதால் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.


