நாகர்கோவில், நவ. 25 –
மழை நீர் வடிகால் ஓடையை மூடியதால் வந்த வினை :
மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறிய சாலையால் தினந்தோறும் அரங்கேறும் விபத்து தீர்வு காண வேண்டிய மாநகராட்சி தற்காலிக தீர்வு மட்டுமே காண்பதால்
தினந்தோறும் வேதனையை அனுபவிக்கும் பள்ளி குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வர
நாகர்கோவில் மாநகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்காட் பள்ளி அருகில் இருந்து டெரிக் சந்திப்பு செல்லும் சாலையில் உள்ள பந்தடி மைதானம் அருகில் மட்டும் சாலையில் தற்போது குண்டும் குழியுமாக மாரி விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சாலையில் ஏற்கனவே வடிகால் ஓடை இருந்துள்ளது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சியால் இப்பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டது ஆனால் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் ஓடையை மூடி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி புதிய சாலை பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர் முதல் மருத்துவமனைக்கு செல்பவர்கள் வரை தினந்தோறும் அவதிக்கு உள்ளாகி வருவது மட்டுமல்லாமல். இருசக்கர வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடக்கும்போது குண்டு குழியில் சிக்கி விபத்துக்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் மழை நீர் வடிகால் ஓடை அமைத்து சாலையை செப்பண்ணிட்டால் மட்டுமே விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களில் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் , மாமன்ற உறுப்பினர்கள் இயல்பு கூட்டத் தொடரில் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்தும் கொள்கின்றனர். ஆனால் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஆலோசனை மட்டும் நடைபெறுகிறது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் செயல் வடிவில் இருந்தாலும் முறையான செயல் வடிவம் பெறவில்லை, இதற்கு எடுத்துக்காட்டாக மாநகர் பகுதிகளில் மாநகராட்சியால் போடப்பட்ட சாலைகளின் தரத்தை கூறலாம்.
மாநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் ஓடைகள் இருந்தது. ஆனால் தற்போது மாநகர் முழுவதும் சாலைகள் அமைக்கும்போது மழை நீர் வடிகால் ஓடைகளை மூடி சாலை அமைக்கப்பட்டு வருவதால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இதனால் புதிதாக போடப்பட்ட சாலைகள் கூட சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாதபடி சிதலமடைந்து காணப்படுகிறது.
சாலை பணிகளை தொடங்கி வைக்கும் மாநகராட்சி மேயர், ஆணையாளர், அப்பகுதி கவுன்சிலர் போன்றவர்கள் பணியை தொடங்கி வைக்கும்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க காட்டும் ஆர்வம் பணி நடைபெறும்போதும் பணி முடிவுறும் போதும் அதனை பார்வையிட ஆர்வம் காட்டுவதில்லை.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவை அறிந்து பணியாற்ற கடமைப்பட்டவராவார்.
பொதுமக்கள் பிரச்சினைகளை குறித்தும், அவர்களின் தேவை குறித்தும், அவர்கள் பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் மாமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்து தீர்வு காண்பதற்காகவே மாமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் தேர்வு செய்து மாநகராட்சிக்கு அனுப்புகின்றனர்.
ஆனால் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு சம்பந்தமான பிரச்சனைகளை எடுத்துரைத்து அதற்கு தீர்வு காண்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் பத்திரிகைச் செய்திகள் மூலம் சில வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சிதலமடைந்து உள்ளதாக செய்திகள் வெளி வந்த பின் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக தீர்வாக மண் மற்றும் ஜல்லியை கொட்டி சரி செய்யப்படுகிறது.
நாகர்கோவில் மாநகராட்சியை நம்பர் ஒன் மாநகராட்சியாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் மேயர் முதலாவது சிதலம் அடைந்த சாலைகளுக்கு தற்காலிக தீர்வு காணாமல் நிரந்தர தீர்வு காண முயல வேண்டும் எனவும் புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவதற்கு முன் ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்கள் சரியாக உள்ளதா ஏதாவது தவறு நடந்து உள்ளதா என்பதை கண்டு அதற்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல் திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் போடப்பட்ட குறிப்பிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் சிதலமடைந்து உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது மாநகர மேயர் மற்றும் ஆணையாளர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் தவறுகள் நடைபெறாது. நாகர்கோவில் மாநகராட்சியும் மேயரின் கனவுப்படி நம்பர் ஒன் மாநகராட்சியாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.



