நாகர்கோவில் டிச 9
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் 05.12.2024 போக்குவரத்து கழக பணியாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கழிவறை வாயிலை மாநகராட்சியிலிருந்து அடைத்து விட்டனர் என்பதற்காக பேருந்துகளை இயக்காமல் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஓய்வு அறை மற்றும் கழிவறை ஆய்வு மேற்கொண்டு அங்கு தொழிலாளர்களிடம் குறைகள் கேட்டறியபட்டது. அப்போது தொழிலாளர்கள் நாங்கள் சுமார் 40 வருடங்களாக இந்த கழிவறையை பயன்படுத்தி வருகிறோம். தற்சமயம் இந்த கழிவறையானது சுத்தம் இல்லாமலும் சுகாதாரம் இல்லாமலும் துர்நாற்றத்துடனும் இருக்கிறது. ஆகவே கழிவறையையும், நாங்கள் ஓய்வு எடுக்கும் ஒய்வு அறையையும் புதுப்பித்து தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள், தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒய்வு அறை மற்றும் கழிவறையை புதுப்பித்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் 15 நாட்களில் வேலை முடித்து கொடுப்பதாக உறுதி அளித்தார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, போக்குவரத்து கழக அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.