நாகர்கோவில், டிச. 15 –
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை நேரடியாக கொடுத்து வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதன் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து குமரி மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஆன்லைனில் பதிவு செய்வதற்கான உத்தரவுகளை கிழித்து எறியும் போராட்டம் நீதிமன்றம் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் வக்கீல் அசோக் பத்மராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி கே மகேஷ், பொருளாளர் சுரேஷ் தங்கம் உட்பட்ட நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து கூட்டமைப்பு தலைவர் அசோக் பத்மராஜ் கூறியதாவது:- நீதிமன்றங்களில் வழக்கு நகல்களை ற்போது ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வசதி போன்று அனைத்து நீதிமன்றங்களிலும் ஏற்படுத்திய பிறகு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த போராட்டம் வழக்கறிஞர்களுக்கான போராட்டம் அல்ல. பொதுமக்களுக்கான போராட்டம். இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும். இன்று 16-ம் தேதி வக்கீல்கள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக சென்று டதி ஜங்ஷனில் உள்ள அஞ்சலகத்தில் இருந்து தலைமை நீதிபதிக்கு தபால் அனுப்ப போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.



