பரமக்குடி,ஏப்.11: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தபெற்ற ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனித் திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று எட்டாவது நாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
21 சட்டிகள், 51 சட்டிகள், அழகு குத்துதல், ஆயிரம் கண் பானை, கரும்பாலை தொட்டி எடுத்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட வைபவம் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை ஆயிரம் வைசிய சபை,முத்தாலம்மன் கோவில் டிரஸ்டிகள், ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
பட விளக்கம்
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.