நாகர்கோவில் ஆக 1
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை தெருவில் சாக்கில் வைத்து இழுத்து கொண்டு போவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சில சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். எனவே இதன் உண்மைத் தன்மை என்ன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என
ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி ஆகும். இங்கு
சுகாதாரத்தினை பேணி காக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கா குப்பை, மக்கும் குப்பை என தரம் பிரித்து தினமும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது.
இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் 14 மின் வாகனங்கள், தள்ளுவண்டிகள்,மினி டெம்போ தூய்மை பணிக்கு தேவையான ஆட்களும் உள்ளனர். மேலும் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பழைய வாகனங்களை பயன்படுத்தி வருவதைக் கண்ட நான் பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பு எடுத்துக் கொண்டதும் முதல் வேலையாக பழைய வாகனத்தை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக புத்தம் புதிய டெம்போ வாகனத்தை வாங்கி குப்பைகளை கொண்டுசெல்லும் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தியு ள்ளேன். தற்போது மேலும் இரண்டு வாகனங்கள் தேவை படுவதால் அதற்கான முயற்சியும் செய்து வருகிறேன். ஆரல்வாய் மொழி பேரூராட்சியில் புகைப் போக்கி நிறுவி மாசில்லா பேரூராட்சியாக மாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் நமது பேரூராட்சியை சுத்தத்திலும், சுகாதாரத்திலும் முதன்மையாகக் கொண்டு வருவதற்கே ஆகும். இத்தனை பணிகள் நடந்து வரும் நிலையில்
தூய்மை பணியாளர்கள் குப்பையை சேகரிக்கும் போது பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக குப்பைகளை கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் சாக்கு முட்டையில் வாங்கி குப்பையை வண்டியில் கொண்டு வைப்பதற்காக செல்லும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது.
ஆனால் குப்பைகளை சேகரிக்க செல்லும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு வீடுகளுக்கு சென்று குப்பைகளைப் பெற்று அக்குப்பைகளை வாகனங்கள் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கீழே கொட்டி விடாதபடி பாதுகாப்பாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதில் சில சமயம் சில வீடுகளில் அதிகமான குப்பைகள் சாக்கில் போட்டு தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதால் அதை அவர்கள் சுமந்து செல்ல முடியாதபடி கையில் பிடித்து இழுத்தபடி கொண்டு செல்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இதை சில சமூக ஆர்வலர்கள் தவறாக சித்தரித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிட்டு இருப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். தூய்மை பணியாளரும் ஒரு சராசரி மனிதன் தான் அவருக்கு அளவுக்கு அதிகமான அதாவது பல நாட்களாக சேர்த்து வைத்த குப்பைகளை அவரிடம் கொடுக்கும் போது அவரால் அதை தூக்கி கொண்டு போக முடியாது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் உள்ள குப்பைகளை அவர்களிடம் கொடுத்து வந்தால் அவர்களுக்கும் சுமை இருக்காது என்பதை நாம் தான் புரிந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றை பேணி காப்பதில் ஆரல்வாய்மொழி பேரூராட்சியை முதன்மை பேரூராட்சியாக கொண்டு வருவதே எனது இலக்கு இதற்கு பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தவறான வதந்தி பரப்பும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.