திங்கள்நகர், டிச. 23 –
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலக்குளம் சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே மார்ஷல் நேசமணி பூங்கா உள்ளது. பூங்காவை ஒட்டி சந்தையும் இருப்பதால் இந்த பூங்காவை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் புதர்கள் மண்டி கிடந்ததால் பூங்காவை புனரமைக்க திங்கள்நகர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக அம்ரூத் 2.0 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூங்கா மேம்பாடு செய்யும் பணி நடந்தது.
கேரளா கட்டிட வடிவமைப்பு கொண்ட நுழைவு வாயில், விளையாடும் மற்றும் அமர்ந்து இருப்பவர்களை வெளியில் இருந்தே பார்க்கும் வகையில் அலங்கார இரும்பு கிரில் வடிவமைப்புடன் காம்பவுண்ட், வண்ண இன்டர்லாக் நடைபாதை, கல் பெஞ்சுகள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சீசா என விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பூங்கா மேம்படுத்தப்பட்டது.
இதனிடையே பூங்காவை கார்டன் போன்று கூடுதல் அழகுபடுத்த அழகு செடிகள், புற்கள், கொடிகள், மரங்கள் நடுவது, அழகிய ஓவியங்கள் வரைவது, தண்ணீர் பீச்சி அடிக்க குழாய்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 16 லட்சம் தனியார் பங்களிப்பை பெற்று 22 ஈச்ச மரங்கள், பூத்து குலுங்கும் அழகிய செடிகள், கொடிகள், மூங்கில், கனி கொன்னை என அழகு மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது. கொடிகள் படர இரும்பு கம்பிகளால் ஆன 3 பந்தல்கள், சுவர் ஓவியங்கள், அங்குள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியும் இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடி வர்ணம் பூசப்பட்டு இரவு பூங்கா ஜொலிக்கும் வகையில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து புனரமைக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ஜேக்கப் வரவேற்றார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாண்டியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பிரின்ஸ் எம்எல்ஏ பூங்காவை திறந்து வைத்தார். கவுன்சிலர் செல்வின் ஜார்ஜ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் பூங்காவை அழகு படுத்த நன்கொடை வழங்கிய தனியார் நிறுவனத்தினர் கவுரவப் படுத்தப்பட்டனர். துணைத் தலைவர் ரீத்தம்மாள், கவுன்சிலர்கள் சாந்தா, சுகன்யா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



