திருப்புவனம்:17
சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக கீழடியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கான பணியினை, திருப்புவனம் வட்டம், கீழடியில், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் துவக்கி வைத்து, திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கென நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் வழங்கினர்.
இந்நிகழ்வின் போது, அமைச்சர் தெரிவிக்கையில்:
சிந்து சமவெளி நாகரிகக் காலக்கட்டத்தில் தமிழர்கள் பண்பாடு கலாச்சாரத்துடன், வாழ்ந்ததற்கான அடையாளம் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு, உலக வரலாற்றில் தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்பாடு கலாச்சாரத்துடன் வாழ்ந்த பெருமை தமிழர்களுக்கு முழுமையாக இருந்ததாக போற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் உலகநாடுகள் அளவில் பேசப்படும் அளவிற்கு பண்டையக்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், பண்டையகாலத்திலேயே வாழ்ந்த முன்னோர்கள் நாகரிக ஆபரணங்கள் பயன்படுத்தியது, எழுத்துச்சுவடிகள், தற்காப்புக்காக பயன்படுத்தும் ஆயுதங்கள், கட்டுமானப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் இதுவரை நடந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம், பண்டையக்கால மக்களின் நகரநாகரிக கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது மட்டுமன்றி, அதனைப் பாதுகாப்பதும் தங்கள் கடமை என உணர்ந்து, தமிழகத்தில் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புக்கள் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து, ஆராய்ச்சிப் பணிகளை செயல்படுத்தி முன்னோர்களின் கலாச்சாரத்தையும், பண்பையும் வரும் இளம் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதன்மூலம் கலாச்சாரங்களையும், தமிழர்களையும் எப்பொழுதும் பாதுகாக்கும் தலைவராகத் திகழக்கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.
கீழடி ஆராய்ச்சி என்பது இந்த மண்ணிற்கு கிடைத்த பெரிய பாக்கியம் ஆகும். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகியப்பகுதிகளில் தொல்லியியல் துறையின் மூலம் இதுவரை 9 -கட்ட அகழாய்வு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது 10-ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிப் பணிகளும் இன்றையதினம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 23.01.2025 அன்று, கீழடியில் திறந்தவெளி
அருங்காட்சியகம் அமைப்பதற்கென ரூ.17.80 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது மேலும் சிறப்புக்குரியதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியக பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கீழடியின் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பங்களிப்பினையும் ஏற்படுத்திடும் நோக்கில், தங்களது நிலங்களை திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக வழங்கியுள்ளனர். அவர்களை பாராட்டிடும் வகையிலும், கௌரவிப்பதன் வகையிலும், நிலங்களை வழங்கிய 16 உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தினுள் பார்வையாளர்களை கவருகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் கைவினை பொருட்களின் விற்பனையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பண்டையகால தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகின்ற வகையிலும், போற்றுகின்ற வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக நடவடிக்கைகள் தமிழக முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. செல்வசுரபி தொல்லியியல்துறை இணை இயக்குனர் சிவானந்தம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் அருங்காட்சியக இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.