மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் உள்ளன. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தின சபை, தாமிர சபை, சித்திரை சபை என பஞ்ச சபைக்கும் தனித்தனியாக உற்சவ திருமேனிகள் உள்ளன. இந்த நிலையில், திருவாதிரைப் பெருவிழா, ஆருத்ரா மகா அபிஷேகத்தையொட்டி, நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்) சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் உற்சவ திருமேனிகள் சுவாமி கோயில் 6 கால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்திலும் எழுந்தருளினர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கட்கிழமை காலை வரை இரு இடங்களிலும் ஆருத்ரா அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. கால பூஜைகள் முடிவடைந்ததையடுத்து, காலை 7 மணியளவில் பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் 4 மாசி வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.