கீழக்கரை, ஜூன்.30-
கீழக்கரையில் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 1-வது கவுன்சிலர் முகமது பாதுஷா கூறியதாவது. கீழக்கரையில் மூன்று மாதங்களாக குப்பைகள் நிறைந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது கிடையாது. எனது வார்டில் குப்பை அல்லும் துப்புரவு தொழிலாளர்கள் வராமல் நானே குப்பை எடுத்து எனது வாடை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கீழக்கரை முழுதும் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும் எனது வார்டில் வருகால் ஏற்படுத்தி தர வேண்டும் என்று இரண்டு வருடங்களாக நகர்மன்றத்தில் தீர்மானம் வைத்துள்ளேன். இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஜாமியா நகர், அல் அக்சா நகர் பகுதிகளில் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கழிவுநீர் செல்வதற்காக பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்காக தெற்குத் தெரு ஜமாதுக்கு சொந்தமான நிலத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரையிலும் அந்த இடத்தை எந்த ஒரு பயன்பாட்டிற்கும் கொண்டு வரவில்லை. மேலும் வீட்டு வரிகளில் உள்ள பெயர்கள் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். 9-வது வார்டு கவுன்சிலர் நசீருதீன் கூறியதாவது: நகராட்சியில் வீட்டு வரி பெயர் மாறுதல், புதிய வீட்டு வரி செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன.இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.பெரும்பாலான வேலைகள் இடை தரகர்கள் மூலமே நடைபெற்று வருவது மனவேதனை அளிக்கிறது. இதனை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் எனது வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அந்தப் பணிகளை சரி செய்யவில்லை. எனவே எனது சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு நகர் மன்றம் அனுமதி தர வேண்டும். 19-வது வார்டு கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ் கூறியதாவது: பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி குப்பைகளை அகற்றுவது சுகாதாரத்தை மேம்படுத்துவது, தெரு விளக்குகளை சரி செய்வது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது நகராட்சிகளில் இரண்டு ஆண்டு காலமாக இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனை உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். 21-வது வார்டு கவுன்சிலர் சித்தீக் கூறுகையில் எனது வார்டில் இதுவரையிலும் திருவிளக்கு கிடையாது அனைத்து தெருக்களிக்கும் தெருவிளக்கு பொருத்தி தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதுபோன்று நகர் மன்றத்தில் வைக்கப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகர் மன்ற தலைவர் உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷேக் ஹூசேன், மீரான் அலி, முகமது காசிம், முகமது ஹாஜா சஹைபு, பயாஸ்தீன் உள்பட 19 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர.மேலும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வன்,மேலாளர் உதயகுமார் உள்பட நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.