மார்த்தாண்டம், டிசம்பர் 31 –
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதி, மாங்கா விளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (50). உண்ணாமலை கடை பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி இரவு ஸ்டாலின் தனது வீட்டின அருகே உள்ள சிறிய பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டாலின் பாலத்தில் இருந்து சுமார் 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இரவு நேரம் என்பதால் உடனடியாக யாரும் கவனிக்கவில்லை.
பின்னர் மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் மயங்கி கிடந்த ஸ்டாலினை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்டாலின் இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



