பரமக்குடி, ஏப்.19 : பரமக்குடி பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதிகளில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மாவட்ட எஸ்பி சந்தீஷ் மணல் கடத்தலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தொடர்ந்து இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து. போலீசார் மணல் திருட்டு குறித்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கடுக்கான் (எ)கார்த்திக்(38) என்ற கருப்புசாமி என்பவரை பிடித்த பார்த்திபனூர் போலீசார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர், தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.