புதுக்கடை, மே-31.
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி முள்ளூர்துறை யை சேர்ந்தவர் ஆண்டனி ஹன்ஸிலின் (50) இவரது மனைவி சரிதா (40). கணவன் மனைவி இருவரும் சம்பவ தினம் வீட்டில் இருந்தனர். அப்போது ஆண்டனி ஹன்ஸிலினை தேடி கர்நாடக மாநில போலீசார் வீட்டிற்கு வந்தனர். ஆண்டனி ஹன்சிலின் வீட்டின் மாடியில் இருந்தார். வீட்டில் இருந்த சரிதாவிடம் கர்நாடக மாநில போலீசார் ஆண்டனி ஹன்சிலினை வழக்கு தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வாரண்ட் கொடுத்துவிட்டு சென்றனர்.
போலீஸ் சென்ற பிறகு சரிதா வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். மாடியில் இருந்த ஆன்டனி ஹன்சிலினை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது, அவர் வீட்டு அருகே உள்ள தென்னை மரம் அருகே படுகாயங்களுடன் கடந்தார். இதை அடுத்து சரிதா கணவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆண்டனி ஹன்சிலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புதுக்கடை போலீசில் சரிதா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில போலீசார் ஆண்டனி ஹன்சிலினை பண மோசடி வழக்கு சம்மந்தமாக வாரண்ட் அளிக்க தேடி வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து அவர் மாடி வழியாக தப்பி சென்றுள்ளார். பின்னர் வீட்டை ஒட்டி உள்ள தென்னை மரம் வழியாக கீழே இறங்கிய போது, அவர் தவறி விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.